திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.55 திருநாரையூர் - திருக்குறுந்தொகை |
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.
|
1 |
புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.
|
2 |
வேடு தங்கிய வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.
|
3 |
கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்
கக்கி னாரமும் அம்ம அழகிதே.
|
4 |
வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே.
|
5 |
சூலம் மல்கிய கையுஞ் சுடரொடு
பாலு நெய்தயி ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்
கால நீழலும் அம்ம அழகிதே.
|
6 |
பண்ணி னான்மறை பாடலொ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.
|
7 |
என்பு பூண்டெரு தேறி இளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது அம்ம அழகிதே.
|
8 |
முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுவான்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுதல் அம்ம அழகிதே.
|
9 |
கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |